21-4-2019 முதல் 27-4-2019 வரை
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
21-4-2019- விருச்சிகம்.
23-4-2019- தனுசு.
25-4-2019- மகரம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: அஸ்வினி- 3, 4, பரணி- 1.
செவ்வாய்: ரோகிணி- 3, 4, மிருகசீரிடம்- 1.
புதன்: ரேவதி- 2, 3, 4, அஸ்வினி- 1.
குரு: மூலம்- 1.
சுக்கிரன்: உத்திரட்டாதி- 1, 2, 3, 4.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 2.
கேது: பூராடம்- 4.
கிரக மாற்றம்:
22-4-2019- புதன் அஸ்தமனம்.
26-4-2019- மேஷ புதன், குரு வக்ரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் வாரத்தொடக் கத்தில் 4-க்குடைய சந்திரன் சாரம் பெறுகிறார். (ரோகிணி). வாரக்கடைசியில் சுயசாரம் பெறுகிறார். (மிருகசீரிடம்). தேக ஆரோக்கியத்தில் தெளிவு நிலை ஏற்படும். தாய்வழி உறவினர்கள் வகையில் அன்பும் ஆதரவும் எதிர்பார்க்கலாம். பூமி, வீடு, வாகன வகையில் நற்பலன்களை சந்திக்கலாம். சிலர் குடியிருப்பு மாற்றம் அல்லது ஊர் மாற்றங்களைச் சந்திக்கலாம். வாகனப் பரிமாற்றம் உண்டாகலாம். 9-ஆமிடத்தில் குரு ஆட்சி பெறுகிறார். அவருடன் 10-க்குடைய சனி சம்பந்தம். தர்மகர்மாதிபதி யோகம் செயல்படுகிறது. அப்படிப் பட்ட தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும் ஜாத கர்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும். இந்த உலகத்தில் எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்க ஒன்று பணபலம் வேண்டும் அல்லது படை பலம் வேண்டும். இந்த இரண்டும் இல்லாதவர்களுக்கு தெய்வபலம் இருந்தால் போதும். உங்களுக்கு தெய்வபலம் முழுமையாக விளங்குகிறது. அத்துடன் ராசிநாதன் செவ்வாய் 2-ல் இருந்து 9-ஆமிடத்தை யும், 9-ல் உள்ள தர்மகர்மாதிபதிகளையும் பார்க்கிறார். அதனால் கும்பிடப்போன தெய்வம் எதிரில் வந்தமாதிரி, உங்களுடைய எண்ணங் களும் திட்டங்களும் இறையருளால் முழுமையாக நிறைவேறும்.
பரிகாரம்: திருப் பரங்குன்றம் முருகப் பெருமானை வழிபடவும். வேலுக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம். அவருடன் 2, 5-க்குடைய புதன் நீசம் என்றாலும், உச்சனோடு சம்பந்தம் என்பதால் நீசபங்க ராஜயோகமாகிறது. அதனால் ரிஷப ராசிக்கு அட்டமச்சனி தோஷம் விலகும். 8-க்குடைய குரு 8-ல் ஆட்சி என்பதாலும், கேது- ராகு சம்பந் தப்படுவதாலும் குறுக்கீடுகளும், மன உளைச்சல்களும் உண்டானாலும் அவை பாதிக்காது. 2-ல் ராகு இருப்பதால், அக்கம் பக்கம் பார்த்துப் பேசவேண்டும். ஒரு வார்த்தை வெல்லும்- ஒரு வார்த்தை கொல்லும். ராகு- கேது, சனி சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடந்தால் வீண்பழி உண்டாகும். சொல்லாததை சொன்னதாக வம்புவழக்கு தேடிவரும். என்றாலும் குரு பார்ப்பதால், சாட்சி வைத்து உங்கள்மேல் உண்டாகும் அபாண்டத்தை நிவர்த்தி செய்யலாம். உடன்பிறந்தோர் வகையில் அர்த்தமற்ற கருத்து வேறுபாடுகளும், கவலைகளும் ஏற்பட இடமுண்டு. கவன மாக நடந்துகொள்ளவேண்டும். நியாய மாகத் தெரிந்தாலும், அந்தக் கருத்தை வெளியிடாமல் மௌனம் சாதிப்பது நல்லது. "மௌனம் கலகநாஸ்தி' என்பார்கள். 11-ல் உள்ள புதனும் சுக்கிரனும் எதிர்பாராத லாபம், வெற்றி, திடீர் அதிர்ஷ்டம், யோகம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். சிலருக்கு முன்னோர்கள் அல்லது பங்காளி வகை யிலுள்ள வம்புதும்பு, வழக்கு விவகாரங்கள் இக்காலம் உங்களுக்கு சாதகமாக அமையும். புதுமுயற்சிகளை நம்பிக்கையோடும் தைரியத் தோடும் மேற்கொண்டு வெற்றி வாய்ப்பை எட்டிப் பிடிக்கலாம்; தட்டிப்பறிக்கலாம். எதிரிகளை ஜெயிக்கலாம்.
பரிகாரம்: கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதிகளை வழிபடவும். (திருப்பரங் குன்றம் இஞ்சினீயரிங் காலேஜ் பாதை).
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
ஜென்ம ராசியில் ராகு நிற்க, 7-ல் சனி, கேது அமர்வது ஒருவகையில் பாதிப்புதான். திருமண வயதில் உள்ளவர்களுக்குத் திருமணத்தடையும், திருமணமானவர்களுக்கு கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடும், இடைக்கால பிரிவும் ஏற்பட இடமுண்டு. 7-ல் குரு ஆட்சிபெறுகிறார். ஜனன ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்தால் வேலை, தொழில் காரணமாக அல்லது சம்பாதிப்பதற்காக குடும்பத்தைவிட்டுப் பிரிந்து செல்லலாம். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வு காரணமாக வெளியூர் போகலாம். பாதகமான தசாபுக்திகள் நடந்தால் விபத்து, வைத்தியச்செலவு ஏற்படும். ஒரு அன்பர் காரை, காளை மாட்டின்மீது மோதிவிட்டார். போலீஸ் செல்வாக்கு இருந்ததால் வழக்குப் பதியவில்லை. இருந்தாலும், மாட்டுக்காரன் அழுத அழுகையைப் பார்த்து அனுதாபப்பட்டு ஐயாயிரம் ரூபாய் வைத்தியச் செலவுக்காகக் கொடுத்தார். இது மிதுன ராசிக்காரர்களுக்கும் பொருந்தும். குரு மீன ராசி என்பதால், மீன ராசிநாதன் குரு ராகு- கேது, சனி சம்பந்தம் பெறுவதால், அவர்களுக்கும் பொருந்தும். மீன ராசிநாதன் புதன் 10-ல் நீசமாக இருந்தாலும், உச்சம் பெற்ற சுக்கிரனோடு சம்பந்தம் பெறுவதால் நீசபங்கமாகி, உங்களுக்கு பாதுகாப்பாக அமையும்.
பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ல் குரு, சனி, கேது மறைகிறார்கள். சனி, கேது 6-ல் மறைவது நல்லதுதான்; குற்றமில்லை. ஆனால், 9-க்குடைய குரு 6-ல் மறைவது குற்றம்தான். அதேசமயம் 9-ல் சுக்கிரன் உச்சம்பெறுவதால், குருவுக்கும் மறைவு தோஷம் விலகும். 3, 12-க்குடைய புதன் 9-ல் நீசபங்கம். ஒருசிலருக்கு பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் உடன்பிறப்புகளோடு உடன்பாடு ஏற்படாது. முறையான பங்கு பாகங்கள் தரமாட்டார்கள். அதற்குக் காரணம் 8-க்குடைய சனி 3-ஆமிடமான சகோதர ஸ்தானத்தைப் பார்ப்பதுதான். என்றாலும், 3-ஆமிடத்துக்கு பாக்கியாதிபதி சுக்கிரன்- ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் உச்சம்பெற்று 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஏமாற்றத்துக்கு இடமிருக்காது. அதாவது பசிக்கிற நேரம் உணவு கிடைக்காது. பசி அடங்கிய பிறகு அல்லது சாப்பிட்டபிறகு உணவு கிடைத்தால் என்ன பயன்? 12-ல் உள்ள ராகு அதிகமான அலைச்சலைத் தரும். ஆனாலும், நன்மையும் லாபமும் எதிர்பார்க்கலாம். 2-க்குடையவர் 10-ல் உச்சம் பெறுவதால் புதுமுயற்சிகள் கைகூடும். செய்தொழில் விருத்தியடையும். பணிகளில் மனநிறைவு ஏற்படும்.
பரிகாரம்: சிங்கம்புணரியில் வாத்தியார்கோவில் சென்று முத்துவடுக நாதரை வழிபடவும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சம்பெறுகிறார். 9-ஆமிடம் திரிகோண ஸ்தானம். 5-ஆமிடமும் திரிகோண ஸ்தானம். 5-க்குடைய குரு ஆட்சிபெற்று 9-ஆம் இடத்தையும் பார்க்கிறார்; ஜென்ம ராசியையும் பார்க்கிறார். ஆக 1, 5, 9 மூன்றும் திரிகோண ஸ்தானங்கள். இதை லட்சுமி ஸ்தானம் என்பார்கள். 1, 4, 7, 10 ஆகிய நான்கும் கேந்திர ஸ்தா னங்கள். இதை விஷ்ணு ஸ்தானம் என்பார்கள். லட்சுமி ஸ்தானம் என்பது எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் குறிக்கும். விஷ்ணு ஸ்தானம் கடும் முயற்சிகளுக்குப் பிறகு கிடைக்கும் வெற்றியைக் குறிக்கும். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்' என்பது வள்ளுவர் வாக்கு. இதனால் என்ன புரிகிறது என்றால், அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்கூட விடாமுயற்சியால் யோகத்தை அடையலாம். அதற்கு உதாரணம் ஏகலைவன்தான். குரு துரோணர், ""அரசுப் பரம்பரை இல்லாதவர்களுக்கு வில்வித்தை கற்றுத்தரமாட்டேன்'' என்றார். அதனால் ஏகலைவன் துரோணரை சிலை வடிவத்தில் வைத்து, குருவாகப் போற்றி, அர்ச்சுனனை மிஞ்சிய வில்லாளனாகப் பயிற்சி பெற்றான். அர்ச்சுனன் தூண்டுதலால், குரு துரோணர் ஏகலைவனிடம் குரு காணிக்கையாக கட்டை விரலை வெட்டச் செய்தார். விஷ்ணு ஸ்தானம் வலுப்பெற்றும், லட்சுமி ஸ்தானம் கைகொடுக்கவில்லை. அதேசமயம் ஏகலைவனுக்குச் செய்த பாரபட்ச நடவடிக்கையால், பாரத யுத்தத்தில் துரோணர் வில்லைத் தூக்கி எறிந்துவிட்டு (அஸ்வத்தாமா இறந்து விட்டதாக நினைத்து) யுத்தகளத்திலிருந்து வெளியேறிவிட்டார். இதுதான் தெய்வ தண்டனை.
பரிகாரம்: திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் 7-ல் நீசம் பெறுகிறார். 2, 9-க்குடைய சுக்கிரன் 7-ல் உச்சம்பெறுகிறார். அவருடன் புதன் சேர்ந்திருப்பதால் நீசபங்கமடைகிறார்; ராஜயோகத்தையும் அடைவார். நீசகிரகம் உச்சனோடு சம்பந்தப்பட்டாலும் அல்லது பார்த்தாலும், நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், அம்சத்தில் நீசகிரகம் உச்சமடைந்தாலும் அல்லது உச்ச கிரகத்தோடு சம்பந்தப்பட்டாலும் நீசபங்கம் ஏற்படும் என்பது நீசபங்க ராஜயோக விதிகளுள் ஒன்று. இதன்படி புதன் நீசபங்கம் அடைவதால், உங்கள் செல்வாக்கு, கீர்த்தி, புகழ், கௌரவம் ஆகியவை மிகச் சிறப்பாக விளங்கும். செய்யும் தொழில் களில் தடையில்லாத முன்னேற்றமும் வெற்றியும் கிட்டும். குடும்பத்தில் நடக்கவேண்டிய சுபகாரியங்கள் எல்லாம் நன்றாக நடக்கும். கையில் பணமிருந்தாலும், இல்லாவிட்டாலும் இறையருளால் உங்கள் தேவைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறும். இவையெல்லாம் 7-ல் ராசியாதிபதி (1, 10-க்குடையவர்) நீசபங்க ராஜயோகமடைவது; 9, 10-க்குடைய வர்கள் (சுக்கிரன், புதன்) தர்மகர்மாதிபதி யோகத்தால் இணைவதுமாகிய பலன்களாகும். 6-க்குடைய சனி, பத்தாமிடம், ஜென்ம ராசி இரண்டையும் பார்ப்பதால், சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை விலகும்.
பரிகாரம்: மதுரை- திருப்பரங்குன்றத் தில் உள்ள சிவப்ரகாச சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் உச்சம். அவருடன் 9-க்குடைய புதன் நீசம். உச்சனோடு சேர்வதால் நீசபங்கம். புதனுக்கு இரண்டுவகையில் நீசபங்கம் ஏற்படுகிறது. உச்சனோடு சேர்வதாலும், நீசனுக்கு வீடு கொடுத்த குரு ஆட்சிபெறுவதாலும் நீசபங்கம் ஏற்படுகிறது. 9-ல் ராகு நிற்பது பூர்வபுண்ணிய தோஷமாகும். ஆனால், அந்த 9-ஆமிடத்துக்கு தர்மகர்மாதிபதிகளான சனியும் குருவும் இணைந்து 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் நன்மை உண்டாகும்; தோஷம் விலகும். அதாவது எந்தவொரு பாவகத்தைப் பார்க்கும்போதும், அந்த பாவகத்தை லக்னமாக நினைத்துக்கொண்டு, அதற்கு 5, 9-ஆம் இடங்களையும், 5, 9-க்குடையவர்களையும் கணிக்கவேண்டும். அத்துடன், அந்த பாவகத்துக்கு 9, 10-க்குடைய தர்மகர்மாதிபதிகளையும் இணைத்துப் பலன்சொல்ல வேண்டும். அது வலுவாக இருந்தால், அந்த பாவகத்தின் மற்ற எல்லா தோஷங்களும் அடிபட்டுப்போகும். பூர்வீகத்தில் நல்ல பாம்பை அடித்துக் கொல்வதும் அல்லது பாம்புப் புற்றை இடிப்பதும் நாகதோஷம். அதனால் குடும்பத்தில் நல்ல காரியங்கள் தடைப்படலாம். அல்லது சேதமடையலாம். இதுதான் 9-ல் இருக்கும் ராகு தோஷ மாகும்.
பரிகாரம்: கோவை மருத மலையில் பாம்பாட்டிச் சித்தர் சமாதியை வழிபடலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். 2-ஆமிடத்தில் குரு, சனி, கேது சம்பந்தம்; ராகு பார்வை. 8-க்குடைய புதன் 5-ல் நீசம். என்றாலும் நீசபங்கம். எல்லா முயற்சிகளும் காரியங்களும் தொடக் கத்தில் மளமளவென்று துரிதமாகச் செயல்படும். ஆனால், முடியப்போகும் போது காரண காரியமில்லாமல் தடை ஏற்படும்; தோல்வியாகும். உங்கள் செயல் பாட்டில், முடிவை நினைத்து விரக்தியும் வேதனையும் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் வில்லங்கம், விவகாரங் களைச் சந்திக்கநேரும். தேவையற்ற இடமாற்றங்களும் அல்லது பதவி மாற்றங் களும் ஏற்படலாம். அன்யோன்யமாக இணைந்து வாழ்ந்த தம்பதிகள் கருத்து வேறுபாடுகளுக்கு வசமாகி கவலைப் படநேரும். அதற்கு இடம்தராமல் மனப் பக்குவம் பெற்று, மறப்போம் மன்னிப் போம் என்று செயல்படவேண்டும். குறிப் பாக, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடைய பொறாமையும் துர்போதனையும், உங்கள் குடும்பத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். கவனம் தேவை. 5-ல் உள்ள புதனும் சுக்கிரனும்- பிள்ளைகள் நல்லவர் களாக அமைந்து பெற்றோருக்கு இணைப்புப் பாலமாக செயல்படச் செய்யும்.
பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி சென்று மௌனஜோதி நிர்வாண சுவாமி ஜீவசமாதியை வழிபடலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு ஜென்மத்தில் ஆட்சிபெறுகிறார். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, கீர்த்தி ஆகியவற்றுக்குக் குறைவில்லை. செய்யும் தொழில் சிறப்பாக இயங்கி, செல்வாக்குப் பெறும். அரசுத்துறையில் பணிபுரிகிறவர்கள் மேலிலிடத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாகி, பயனும் பலனும் அடையலாம். தனியார்துறையில் பணிபுரிகிறவர்கள்- வேலை (ஒர்க்லோடு) அதிகமாக இருந்தவர்கள் மேலிலிடத்தாரின் பாராட்டுக்கும் புகழுக்கும் பாத்திரமாகலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் சனி, ராகு- கேது சம்பந்தத்தால், சிறியோர் செய்த பெரும்பிழை எல்லாம் பெரியோர் பொறுத்தல் கடமை என்று, பெருந்தன்மையாக நடந்துகொண்டால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். இதெல் லாம் ராகு, செவ்வாய், சனி, கேது செய்யும் திருவிளையாடல்கள். குரு ஆட்சிபெறுவதால், எம்.ஜி.ஆர், ""உன்னையறிந்தால் போராடலாம் வெற்றிபெறலாம்'' என்று பாடியமாதிரி வெற்றிபெறலாம். 4-ல் புதன், சுக்கிரன் சம்பந்தம் என்பதால் சொந்த வீடு, ஒத்தி வீடு, சொந்த வாகனம், பூமி, நிலம், பிளாட் போன்ற யோகங்களை எதிர்பார்க்கலாம் புதிய தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் தேடிவரலாம். மனைவியின்பேரில் முதலீடு செய்யலாம்.
பரிகாரம்: பொள்ளாச்சி அருகில் புரவிபாளையம் கோடி சுவாமி ஜீவசமாதி சென்று வழிபடவும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு 12-ல் குரு, சனி, கேது சம்பந்தம். 6-ல் ராகு. ராகு- கேது இவர்களுக்கு 3, 6, 11-ஆம் இடங்கள் உத்தம இடங்கள். அதேபோல 12-ம் நல்ல இடம். 3, 6, 12 என்பது பாவஸ்தானம். இவற்றில் பாவகிரகம் இருப்பது நல்லது. ஆனால், சனி ராசிநாதன்; 2-க்குடையவர் 12-ல் மறைவ தால், உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு இழக்கும். குடும்பத்தில் பிரச்சினைகளும் விரயங்களும் உண்டாகும். கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் இருக்கும்போது கெட்டவை கெட்டுப்போகும். போட்டி, பொறாமைகள் விலகும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, சச்சரவு போன்ற பலன்கள் மாறி ஒற்றுமையுணர்வும், உடன்பாடும் உருவாகும். உங்களின் பொறுமையும் அனுசரிப்புத்தன்மையும் குடும்பத்தில் அமைதி, ஆனந்தத்தை உருவாக்கும். நண்பர்கள், உறவினர்கள், உடன்பிறப்புகள் உதவும்கரங்களாக விளங்கு வார்கள். தாராளமான பணப்புழக்கம் ஏற்பட்டாலும், கையில் மிச்சம் மீதியில்லாமல் செலவாகிவிடும். எல்லாமே சுபச்செலவுகள்தான்; பயனுள்ள செலவு கள்தான். அதனால் ஆறுதல் அடையலாம். தொலைதூரத்தொடர்பு லாபகரமாகவும் வெற்றியாகவும் அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் சேங்காலிலிபுரம் சென்று ராமானந்தர் ஜீவச மாதியை வழிபடவும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் 2, 12-க்குடைய குரு சம்பந்தம். சரளமான பணப்புழக்கம் காணப்படும். குடும் பத்தில் அமைதி, ஆனந்தம் நிலவும். வடிவேலு பாடிய மாதிரி, "எட்டணா இருந்தால் எட்டூருக்கு உங்கள் பாட்டு கேக்கும்.' பை நிறையப் பணமிருந்தாலே உங்களுக்குத் தனிபலம் அமைந்துவிடும். நியாயமான ஆசைகளும் தேவைகளும் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையுணர்வு மேலோங்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப் படும். எதிர்பாராத செலவுகள் திடீரென்று வந்தாலும், அதை சமாளிக்க எதிர்பாராத வரவுகளும் வந்துசேரும். அதனால் எண்ணங்கள் ஈடேறும். நினைத்தது நிறைவேறும். வறுமை, தரித்திரத்துக்கு இடமில்லை. 5-ல் ராகு. தேவையற்ற கற்பனைகளும் குழப்பங்களும் சிலசமயம் உருவா னாலும், 3-ஆமிடம் தைரியஸ்தானத்தில் உச்சம்பெறுவதால், தைரியம், தன்னம் பிக்கையால் எல்லாப் பிரச்சினை களையும் சமாளித்து, தொல்லைகள் இல்லாமல்செய்து எல்லாவற்றையும் ஜெயிக்கலாம். தொழில், வேலை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பு களுக்கும் இடமில்லை. வாழ்க்கையிலும் நிறைவு, நிம்மதிக்கு இடமுண்டு.
பரிகாரம்: அருப்புக்கோட்டை அருகில் புலியூரான் சென்று சித்த குருநாத சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சிபெறுகிறார். அவரை 9-க்குடைய செவ்வாய் 8-ஆம் பார்வை பார்க்கிறார். இது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகமோ, பரிவர்த்தனை யோகமோ, கஜகேசரி யோகமோ (சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருப்பது), குருச் சந்திர யோகமோ இருந்தால், அந்த ஜாதகர் எந்த வகையிலும் தாழ்ந்துவிட மாட்டார். எந்தக் காலத்திலும் முடிசூடா மன்னர்களாகத் திகழ்வார்கள். குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அவர்களுக்குக் கைகொடுக்கும். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக, எதிர்பாராத அதிர்ஷ்ட யோகங்கள் தேடாமலே தேடிவந்து அரவணைக்கும். குருவோடு சனி, கேது- ராகு சம்பந்தப்படுவதால், சிலசமயம் தேவையற்ற விரயச்செலவுகளும் உண்டாகலாம். ஒரு பொருளுக்கு இருமுறை பணம் செலுத்தும் நஷ்டமும் வரலாம். அல்லது வாகன விபத்தால் நஷ்டஈடு செய்யும்படி ஆகலாம். (சனி- விரயாதிபதி.) 4-ஆமிடம் வாகன ஸ்தானம்; அங்கு ராகு! என்றாலும், குரு ஆட்சிபெறுவதால் இறைக்கிற கிணறு ஊறும் என்பதுபோல, நஷ்டங்கள் ஈடுசெய்யப்படும்.
பரிகாரம்: கரூர் அருகில் நெரூர் சென்று சதாசிவப் பிரம்மேந்திராள் ஜீவசமாதியை வழிபடவும்.